சென்னை: இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை அகற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டதற்கிணங்க, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
07.05.2021 முதல் 31.03.2022 வரை முதற்கட்டமாக 167 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு, அதுகுறித்த முதல் புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது புத்தகத்தில் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டடம் மற்றும் திருக்குளம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல், கடந்த 12 ஆண்டுகளாக திருக்கோயில்களுக்கு வரப்பெற்ற பல மாற்று பொன்னினங்களில் பயன்பாடற்ற பொன்னினங்களை ஓய்வுப் பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் கணக்கெடுத்து ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, அந்தந்த திருக்கோயில்களின் பெயரில் தங்க முதலீடு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டு அதன் வட்டித்தொகை திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வட்டித்தொகையாக ஆண்டிற்கு ரூ.2.25 கோடியும், இருக்கன்குடி, பெரியபாளையம், திருவேற்காடு மற்றும் மாங்காடு திருக்கோயில்களுக்கு வட்டித்தொகையாக ஆண்டிற்கு ரூ.2.06 கோடியும் கிடைக்கப்பெறுகிறது.