சென்னை :தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கூகுள் ரீட் அலாங்க் செயலியை அதிகளவில் பயன்படுத்தி தமிழக மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத் கூறும்போது, ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை காலத்தில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக 12 நாட்கள் ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டி நடைபெற்றது.
சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் ' கூகுள் ரீட் அலாங்க் ' ( Google read along ) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைபேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை மாணவர்கள் வாசித்து உள்ளனர் .
வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் இந்த நிகழ்வில் 18.36 லட்சம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் . மாணவர்கள் 12 நாட்களில் 263.17 கோடி சொற்களை சரியாக வாசித்துச் சாதனை படைத்து உள்ளனர் .
இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 லட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்து உள்ளனர் . தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் , ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்துள்ளனர் .
உலகலாவிய அளவில் கூகுள் ரீட் அலாங்க் செயலியை பயன்படுத்தியதில் தமிழக மாணவர்கள் உலக சாதனை புரிந்துள்ளார்கள். 413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 லட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றுள்ளது. அடுத்ததாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் 49.19 லட்சம் மற்றும் மேலூர் வட்டாரம் 41.72 லட்சம் ஆகியவை 2 வது, மூன்றாவது இடங்களை பெற்றுள்ளன .
நுண்ணறிவு செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு இந்த ரீடிங் மரத்தான் தொடர் வாசிப்பு நிகழ்வு உதவி புரிந்துள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்களின் உச்சரிப்புத் திறன் மற்றும் வாசிப்பு வேகம் ஆகியவை மேம்பட்டுள்ளது. பல நூறு கதைகள் வழியாக புதிய சொற்களை மாணவர்கள் கற்றுக் கொண்டுள்ளனர். அலைபேசிகளை வாசிப்புப் பழக்கத்திற்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த இயலும் என்ற புதிய வாய்ப்பை இந்த ரீடிங் மாரத்தான் ஏற்படுத்தி தந்துள்ளது.
மாணவர்கள் தொடர்ந்து கதைகளின் மூலம் தங்களின் கல்வி அறிவையும், சொற்களை கண்டறியும் திறனையும் வளர்த்துக் கொண்டுள்ளனர். முதலில் சொற்களை வாசிப்பதில் தடுமாற்றமாக இருந்த மாணவர்கள் தற்பொழுது தடையின்றி வாசித்து, பாராட்டுகளை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மாணவர்களுக்கான 'எண்ணும் எழுத்தும்' திட்டம்: ஆசிரியர்கள் கூறுவது என்ன?