சென்னை:வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (I.N.D.I.A. Alliance) எதிர்கொள்ள தங்களது கூட்டணியை பலபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழகத்தில் ஏற்கனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA Alliance) இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளும் பத்திரகையாளர் சந்திப்புகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை' என தொடர்ந்து கூறி வருகிறார். இனி அதிமுக - பாஜக கூட்டணி இல்லை; அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும் அதிமுக தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அதிமுக தரப்பில் தெரிவித்ததற்கு பாஜக தேசிய தலைமையிலிருந்து எந்தவித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.
மாறாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அந்த அழைப்புக்காக இருவரும் காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவருமே பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஏற்று கொள்கின்றனர் அதே போல தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவும் தெரிவிக்கிறோம் என கூறியுள்ளதாகவும் சொல்லபடுகிறது.
யார் யார் பாஜக கூட்டணியில்?:தமிழகத்தில் பாஜக தலைமையில் அவைய உள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் பாமகவும் இருக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது. பாமகவைப் பொருத்தவரை, பிரதமர் வேட்பாளராக மோடியை தான் ஏற்று கொண்டுள்ளனர்.அதே போல தற்போது வரை அதிமுகவிற்கு ஆதரவு என்றும் கூறவில்லை அதனால் பாமகவிற்கு அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் இந்த வரிசையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.