சென்னை:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் மோகன் முத்து (25). இவர் மீது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை, மோசடி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல், மிரட்டுதல் உட்பட சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து, பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மோகன் முத்துவை கைது செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடி வந்தனர். ஆனால், மோகன் முத்து காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாகி வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் முத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று (ஜனவரி 09) அதிகாலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களைச் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அதே விமானத்தில் கடந்த 8 மாதங்களாக, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் முத்துவும் வந்துள்ளார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மோகன் முத்துவை பிடித்து குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர். அதோடு, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, தலைமறைவு குற்றவாளி சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த போது விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார் என்ற தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து, மோகன் முத்துவை கைது செய்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல, பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வெளிநாட்டில் வேலை பார்ப்போரின் மனைவிகளே டார்கெட்.. குமரி லீலை மன்னன் போக்சோவில் சிக்கியது எப்படி?