தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே வி.பி சிங்கிற்கு செய்யும் உண்மையான மரியாதை" - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்! - Dr Ramadoss Statement

PMK Ramadoss statement: முன்னாள் பிரதமர் வி.பி சிங் சிலைத் திறப்பு விழாவில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதே வி.பி சிங்கிற்கு செய்யும் உண்மையான மரியாதை என்று பாமக நிறுவனர் இராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் இராமதாஸ்
பாமக நிறுவனர் இராமதாஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 8:03 PM IST

சென்னை:அச்சம் மற்றும் தயக்கங்களை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை முன்னாள் பிரதமர் வி.பி சிங் சிலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். இதுவே வி.பி சிங்கிற்கு செய்யும் உண்மையான மரியாதை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்துபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் சமூகநீதி காவலர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள், நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் அவரது உருவச் சிலை முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதேநேரத்தில், வி.பி.சிங்கின் கனவான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். வி.பி.சிங் பிரதமர் பதவியில் இருந்த போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. எனினும், அவரது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவை எழுந்த போது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் நான் வலியுறுத்தியதன் பயனாக, அதே ஆண்டில் அதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற பா.ம.கவின் கோரிக்கையை வி.பி.சிங் ஆதரித்தார். 2007 ஆம் ஆண்டில் கடுமையான உடல்நலக் குறைவால் வி.பி.சிங் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகக் குறைபாட்டுக்காக ஒருநாள் விட்டு ஒருநாள் குருதி சுத்திகரிப்பு செய்ய வேண்டியிருந்தது.

அத்தகைய சூழலிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட வி.பி சிங், “மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்து உச்சநீதிமன்றம் வினா எழுப்பவில்லை. ஆனால், இப்போது வினா எழுப்பும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். அதை ஓராண்டுக்குள் செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

அதை தேசிய அளவில் செயல்படுத்த வாய்ப்பற்ற நிலையில், மாநில அளவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சர் செய்ய வேண்டும். மிகக் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் மீறி மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியதால் தான் இந்தியாவின் சமூகநீதிக் காவலர் என்று வி.பி.சிங் போற்றப்படுகிறார். அதனால், அவர் ஆட்சியை இழந்து, அதன்பின் வந்த தேர்தல்களில் உயர்சாதி வாக்குவங்கியையும் இழந்தார்.

பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அவரை முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால், அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். ‘‘மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பாக நான் செய்த அனைத்து செயல்களும் சிறப்பானவை என்று பாராட்டப்பட்டன. மண்டல் அறிக்கையை செயல்படுத்திய பிறகு நான் செய்த ஒவ்வொன்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட தீமையாக பார்க்கப்பட்டன.

இந்த ஆட்டத்தில் எனது கால் உடைந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற கோலை (GOAL) அடித்து விட்டேன். அந்த விஷயத்தில் மகிழ்ச்சி. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும். ஒரு செயலை செய்துவிட்டு, அதற்கு இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியதாகி விட்டதே என வருத்தப்படக் கூடாது. நான் கொடுத்த விலை, மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தியதற்கானது ஆகும்’’ என்று கூறி தமது அரசியல் துணிச்சலை வி.பி சிங் வெளிப்படுத்தினார்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு இருந்த அரசியல் துணிச்சல் இப்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு. 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் செயல்படுத்திய போது அவருக்கு அரசியல்ரீதியாவும், சமூகரீதியாகவும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாகவும், சமூகரீதியாவும் எந்த எதிர்ப்பும் இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் கட்சிகள் தமிழக அரசியலில் துடைத்து எறியப்படும் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள். ஓபிசி மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்து சமூகநீதி வழங்குவதற்கு வி.பி சிங்கிற்கு எதிராக இருந்த சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி சமுகநீதி வழங்குவதில் மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், அது குறித்து பேசவும் மு.க ஸ்டாலின் அஞ்சுவது ஏன்? என தெரியவில்லை.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவது தான் சமூகநீதி அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால், எந்த இழப்பும், எந்த எதிர்ப்பும் இல்லாமல், நற்பெயரைப் பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடமளிக்கக் கூடிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசின் சார்பில் நடத்த அஞ்சுவது அழகல்ல.

எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங்கின் சிலைத் திறப்பு விழாவில் வெளியிடுவதன் மூலம் வி.பி.சிங்கிற்கு உண்மையான மரியாதையை மு.க ஸ்டாலின் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:"காமராசர் பல்கலை நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details