இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் தான் நாட்டின் வருங்கால தூண்கள் என்று வீரவேசமாக வசனம் பேசி விட்டு, அவர்களை அரசியலில் வெற்று முழக்கங்களை எழுப்பவும், வெறுப்பரசியலை வளர்க்கவும் மட்டும் பயன்படுத்தினால், அவர்கள் வருங்கால தூண்களாக இருக்க மாட்டார்கள் துரும்பாகத் தான் நலிவடைந்து போவார்கள்.
மாறாக அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை உறுதி செய்து, அதன்பிறகு ஆக்கப்பூர்வ அரசியலுக்கு பழக்கினால் அவர்களும் வளம் பெறுவார்கள்; அவர்களால் நாடும் முன்னேறும்.
இந்த உன்னதமான நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் (Tamil Nadu Youth Development Movement) எனும் புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறேன். எல்லோரும் கல்வி, திறன்மேம்பாடு, பயிற்சி, வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது தான் இந்த புதிய இயக்கம் தொடங்கப்பட்டதன் எளிய நோக்கம் ஆகும்.
அரசியல், சமூக, சமுதாய, கலாசாரம், மொழி, கல்வி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், இளைஞர் சக்தி, நல்லாட்சி, ஊடக அறம் உள்ளிட்டவற்றின் முன்னேற்றத்திற்காக இது வரை 29 அமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், முப்பதாவது அமைப்பாக தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் செயல்படும். இந்த புதிய இயக்கத்திற்கு சமூக முன்னேற்ற சங்கம், சமூக ஊடகப் பேரவை, பசுமைத் தாயகம் ஆகிய 3 அமைப்புகளும் வழிகாட்டும்.
அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கும் நான்காம் தொழிற்புரட்சி காலத்தில் அனைத்து துறைகளும் தானியங்கி தொழில்நுட்ப முறைக்கு (Automotion) மாறுவதால் பல துறைகளில் மனிதர்களின் பணிகளை எந்திரங்களும், தொழில்நுட்பமும் செய்யத் தொடங்கி விடும்.
அதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்து, அதனால் சமூகப் பதற்றம் அதிகரிக்கக் கூடும். அவ்வாறு வேலையிழக்கும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்துதல், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவையும் மிகவும் அவசியமான பணிகளாக மாறவிருக்கின்றன.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கத்தின் பணிகள் முக்கியமாகின்றன. முதற்கட்டமாக 12ஆம் வகுப்பு படிக்கும் மற்றும் படித்து முடித்த மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் வழிகாட்டி வகுப்புகள் இணையவழியில் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து, வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல்கள், திறன் மேம்பாடு, தலைமைப்பண்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை அடைவதற்கான பயிற்சிகளையும் இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும்.
மொத்தத்தில் தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டும்; திறன்மேம்பாடு, பயிற்சி ஆகியவற்றை பெற்று வேலை பெறுவோராகவோ, வேலை தருபவராகவோ மாற வேண்டும். அதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதற்கான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு இளையோர் மேம்பாட்டு இயக்கம் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.