விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விழுப்புரம் மாவட்டத்திலும், அதையொட்டிய புதுச்சேரி ஒன்றியப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் வளம் குறித்து 32 இடங்களில் ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. விவசாயத்தை அழிக்கும் வகையிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டில் மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருவது கண்டிக்கத்தக்கது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ராமதாஸ் பாய்ச்சல்! - hydro corpon
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டில் மத்திய அரசு தொடர்ந்து திணித்து வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுப்பதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கினால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்று உழவர்கள் அஞ்சுகின்றனர். அதுவும் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திடம் ஒப்படைப்பது இன்னும் பல மடங்கு ஆபத்தானது ஆகும். ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதனால் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றி வேதாந்தா நிறுவனம் கொஞ்சமும் கவலைப்படாது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை அமைத்து அப்பகுதியில் சுற்றுச்சூழலை நாசப்படுத்தியதுடன், கடல்வாழ் உயிரினங்கள் அழிவதற்கு காரணமாக இருந்தது இதே வேதாந்தா நிறுவனம் தான். அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ள அனுமதியால் விழுப்புரம் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது.
மக்களவை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் வினாவுக்கு விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது' என்று பலமுறை பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பதை ஏற்கவே முடியாது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தினால், அந்த மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது. இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.