இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மிகவும் சிக்கலானவையாக மாறியுள்ளது. இந்நிலையில், அதற்குத் தேவையான நிதியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ஒதுக்கீடு செய்யாதது மிகவும் வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கும் சம பங்கு இருக்கிறது. அதை மத்திய அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது.
கரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்பாடுத்துவதற்காக முதன் முதலில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போது, மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடி, கரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ரூ.4 ஆயிரம் கோடி என மொத்தம் 16 ஆயிரம் கோடி வழங்கும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
அத்துடன், உணவு தானியங்கள் கொள்முதல் செய்ததற்கான மானிய நிலுவை ரூ.1321 கோடி, வரி வருவாய் நிலுவை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை, நிதிப்பற்றாக்குறை மானியம் உள்ளிட்ட சில தலைப்புகளில் மத்திய அரசு உதவிகளை வழங்கினாலும்கூட, தமிழ்நாடு அரசு கோரிய நிதி உதவிகள் இன்னும் வழங்கப்படவில்லை.