இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை, அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடு ஆகும்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் 2016-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 21 மாதங்கள் தாமதமாக 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தான் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் வழங்கப்பட்டது. கடுமையான நிதிநிலை நெருக்கடியால் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை அதிமுக அரசால் வழங்க முடியவில்லை. அதேபோல், 2003-ஆம் ஆண்டில் மத்திய அரசு மேற்கொண்ட கொள்கை முடிவு காரணமாகவே பழைய ஓய்வூதிய முறை கைவிடப்பட்டு, புதிய ஓய்வூதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது.