முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி உட்பட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
தமிழ்நாடு அரசு பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காதவரை ,சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது.
அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும். ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்ப முடியாது. பரிந்துரை செய்வதுடன் அரசின் கடமை முடிந்தது. விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. எனவே நளினியின் சிறை சட்டவிரோத காவல் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.