சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கொங்கு இளைஞர் பேரவை கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி நீண்ட நாட்களாகியும் அவர்கள் விடுதலை செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம். இது தொடர்பாக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இருப்பினும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநரை நிர்பந்திக்க அரசியல் சட்டத்தில் எந்த இடமும் இல்லை.
அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானத்தின் நிலை என்ன என்பது பற்றி ஆளுநர் அலுவலகத்தில் கேட்டு பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசின் வழக்கறிஞருக்கு வாய்மொழி உத்தரவாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் சார்பில் ஆளுநரின் செயலாளருக்கு தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையின் நிலை என்ன என்று கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்துக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து பதில் கடிதம் வந்தது.