தமிழ்நாடு

tamil nadu

ரஜினி தலைமையில் மூன்றாவது அணி அமைய அதிக வாய்ப்பு

By

Published : Nov 12, 2019, 7:46 AM IST

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி தலைமையில் மூன்றாவது அணி அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

rajinikanth-political-stands

2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி தலைமையில் மூன்றாவது அணி அமையும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதையே சமீபத்திய அரசியல் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவு தமிழ்நாடு அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பது நிதர்சனமான உண்மை. இந்த வெற்றிடங்களை நிரப்பும் சக்தி அதிமுகவிலோ, திமுகவிலோ இல்லாத பட்சம் மூன்றாவது சக்தி உருவெடுப்பதையே தமிழ்நாடு அரசியல்களம் எதிர்நோக்கியிருக்கிறது.

அந்த வகையில், அதிமுக ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போராடி தக்கவைத்து கொண்டிருக்கிறார். அதை எப்படியாவது முறையடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் மாற்று சக்தியாகத்தான் உருவெடுப்பேன் என்ற ரீதியில் நடிகர் ரஜினியின் சமீபத்திய கருத்துகள் அமைந்துள்ளன. அனைவரும் எதிர்பார்த்தது போல் அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துவிடுவாரா என்றால் அதையும் ரஜினி மறுத்திருக்கிறார்.

அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த ரஜினிகாந்த் அதற்கு பின்னர் அரசியலுக்குள் தலையிடுவதை தவிர்த்து வந்தார் என்றே கூறலாம். ஊடகத்துக்கு பேட்டி அளிக்க மறுப்பது, செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபமடைவது, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆவது போன்ற செயல்களே அதை உறுதிப்படுத்தி வந்தன.

அதேபோல் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது அல்லது மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளுக்கு தனது பாணியில் ஒரே வார்த்தையில் மேலோட்டமாக பதில் கூறுவது என்றும் ரஜினியின் பேச்சுகள் இருந்தன. அதுமட்டுமின்றி இதற்கு ஏற்றார்போல் பாஜக தரப்பிலும் ரஜினியை போற்றி பேசுவது, ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிப்பது போன்ற செயல்களும் அவ்வப்போது நடந்து வந்தன.

இதன்மூலம் ரஜினி பாரதிய ஜனதா கட்சியின் சாயல்தான் என்ற கருத்துகளும் நிலவிவந்தன. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிப்படையான கருத்தை ரஜினி தெரிவித்துள்ளார்.

'கட்சியில் இணையும் படி எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. என்மீது காவி சாயம் பூச பார்க்கின்றனர். திருவள்ளுவர் மீது காவி சாயம் பூசியது போல் என் மீதும் காவி சாயம் பூச பார்க்கின்றனர். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன்' என்று ரஜினி திட்டவட்டமாக கூற, பேசுவது ரஜினியாப்பா என்பதுபோல் அரசியல் வட்டாரங்கள் திகைத்துப் போயின. ரஜினியின் இந்த கருத்தால் அவரை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் காலூண்றிவிடலாம் என்று பாஜகவின் கணக்குகளை தூள் தூளாக நொறுக்கியுள்ளது.

இந்த கருத்துக்கள் மூலம் அதிமுக, திமுக, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிக்களுக்கும் ரஜினி மாற்று சக்தியாக தனி வழியில் வரப் போகிறார் என்பது புலப்படுகிறது. அப்படி பார்க்கையில் ரஜினி தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும் ரஜினியின் அரசியல் பயணத்துக்கு தொடர்ந்து வியூகம் கூறிவரும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனுக்கும் அவரின் கருத்துக்கும் ரஜினி அங்கீகாரம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details