சென்னை வெற்றி திரையரங்கில் மோதல் சென்னை: தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, நெல்சன் இயக்கிய "ஜெயிலர்" திரைப்படம் இன்று காலை 9 மணி முதல் திரையிடப்பட்டு ரசிகர் மத்தியிலே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் அனிருத்தின் இசையமைப்பில் அத்தனை பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த விமர்சனம் நல்ல முறையில் வருகிறது.
மேலும் ஜெயிலர் படத்தின் வெளியீட்டை, பல்வேறு பகுதியில் இருக்கும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி, ரஜினியின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து, நலத்திட்ட உதவிகள் செய்து திருவிழாவை போல் கோலாகலமாக கொண்டாடினர்.
சென்னையில் உள்ள பிரதான திரையரங்குகளில் திரைப்பிரபலங்கள் பலர் குடும்பத்துடன் சென்று, ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் காலை 9 மணி காட்சி பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தார்.
இதையும் படிங்க:Jailer FDFS: வெளியானது ஜெயிலர்... தியேட்டர்களை அதிர வைத்த ரஜினி ரசிகர்கள்!!
அதேபோல் ஜெயிலர் படத்தில், ரஜினிகாந்த்துடன் நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், நடிகர் வசந்த் ரவி ஆகியோரும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்டப் பல திரையுலக நட்சத்திரப் பட்டாளங்கள் வருகை தந்து ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.
திரைப்படம் பார்த்து வெளியே வந்த அத்தனை ரஜினிகாந்த் ரசிகர்களும் "ரஜினி..! ரஜினி..!" என்றும், "தலைவர் ரஜினிகாந்த் ஒருவரே எப்போதும் சூப்பர் ஸ்டார்..!" என்றும் ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி ஆனந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதே திரையரங்கில் இருந்து வெளியே வந்த இளைஞருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு மோதல் ஏற்பட்டு இளைஞரை ரஜினிகாந்த் ரசிகர்கள் தாக்கினர்.
காரணம் அந்த இளைஞர் படம் மொக்கையாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றிடம் விமர்சனம் கொடுத்ததால் அங்கு இருந்த ரசிகர்கள் கோபம் அடைந்து, இளைஞரை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்த ரசிகர்கள் இருவரையும் அடக்கி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் வெற்றி திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:Jailer Review: ரசிகர்களுடன் படம் பார்த்த படக்குழுவினரின் ரியாக்ஷன்ஸ்!