சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடியதாக, ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. 12 ஆம் தேதி வரை கூட்ட தொடர் நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள்.
பாஜக அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையில் எதேச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தபோது, எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக திரும்பப் பெற்றனர். மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இருந்தது. எதிர்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டனர். பீகாரில் பாஜகவிற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும், தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு அச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்று சிறப்பாக உள்ளது.