தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் டெல்லி கலவரத்தைக் கண்டித்தும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்று கூறினார். மேலும், டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம்கொண்டு அடக்கவில்லை என்றும் பேசியிருந்தார்.
இதனையடுத்து இன்று ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மதகுருமார்கள் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் காஜா மொயீனுத்தீன் பாகவி, அன்வர் பாதுஷாஹ் உலவி, முஜீபூர் ரஹ்மான் மஸ்லஹி, அப்துல் அஜீஸ் பாகவி, இல்யாஸ் ரியாஜி ஆகிய ஐந்து பேரும் நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். முன்னதாக பிப்ரவரி 5ஆம் தேதி ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் இந்த விஷயத்தில் மதகுருமார்கள் தூண்டிவிடப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.