தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒருபுறம் வெயில் வெளுத்துவாங்க மறுபுறம் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டுவருகின்றனர். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் மக்கள் தண்ணீரின்றி தவித்துவருகின்றனர்.
எங்கு பார்த்தாலும் மக்கள் வீதியில் காலிக்குடங்களுடன் தண்ணீர் லாரி வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமல் வீட்டில் அவதிப்படும் மக்கள் அலுவலகத்துக்கு சென்றாலும், உணவகங்களுக்கு சென்றாலும் அதே பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.
தண்ணீர் பிரச்சனையால் பல, ஐடி நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு மழை மட்டுமே காரணம் இல்லை இந்த அளவு தண்ணீர் பிரச்னை வரக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், மழைப்பொழிவு சரியாக இல்லாதது மட்டுமே இதற்கு காரணம் என்று கூறிவிட்டு கடந்துவிட முடியாது. 2018இல் வடகிழக்கு பருவமழை வெறும் 50 விழுக்காடுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது.
இந்தக் குறைவான மழைப் பதிவுதான் தற்போது நிலவிவரும் தண்ணீர் சிக்கலுக்கு காரணமா? என்றால் இல்லை என அடித்துச் சொல்கிறார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சேகர் ராகவன்.
இது குறித்து அவர் பேசுகையில், 'மழைப்பொழிவு குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை, சென்னையில் 2015இல் வரலாறு காணாத மழை பொழிந்து உள்ளது. ஆனால் அந்த சமயத்தில் நாம் தண்ணீரை சேமிக்க தவறியுள்ளோம். மழைப்பொழிவு எங்கு உருவாக உள்ளதோ அங்கு சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் சிறப்பான மழைநீர் சேமிப்புத் திட்டம் செயல்படுத்திய மாநிலம் ராஜஸ்தான், அதே போல் சென்னையில் ஒவ்வாரு மழைத் துளியையும் சேமிக்க வேண்டும் என்பது நமது கடமை. ஆனால் அதை நாம் செய்ய தவறிவிட்டோம். 18 வருடங்களாக மழை தாராளமாக பொழிந்தது.
சென்னையில் பல ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பால் சரியாக தண்ணீர் சேமிக்க முடியாமல் போனது. அதன் விளைவே 2015 சென்னை வெள்ளம் வர காரணமாக இருந்தது. தண்ணீர் சிக்கலைத் தீர்க்க சிறந்த வழி சரியான முறையில் மழை நீரை சேமிப்பது மட்டுமே. 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மழை நீர் சேமிப்பு கட்டாயம் என கூறியது.
அதன்படி 40 முதல் 50 விழுக்காடு மக்கள் சரியாக மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்தினர். அதன் பிறகு மழை நீர் சேமிப்பில் தொய்வு ஏற்பட்டது. இனிவரும் காலங்களில், புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டாயம் இருக்கும் வேண்டும்' என்றார்.