வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது.
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, சுசீந்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல மணி நேரமாகத் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்துவருகிறது. மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான நன்னிலம், குடவாசல், பேரளம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையால் பல முக்கியச் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அரியலூர்
செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் போன்ற பகுதிகளில் பரவலாகவும் மழை பெய்துவருகிறது. இந்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை தூத்துக்குடி
தெற்கு இலங்கை, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்குப் பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடற்பகுதிகள், கன்னியாகுமரி கடல் பகுதி, தெற்கு கேரள பகுதிகளுக்கு 30, 31 ஆகிய தேதிகளில் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவ மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி