விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் கண்ணன். இவரது மனைவி ரேணுகா தேவி. இருவரும் சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் சலூன் கடை மற்றும் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்த அழகு நிலையத்திற்கு வாடிகையாளராக வரும் அனுசியா என்பவர் ரேணுகா தேவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார்.
அனுசுயா, தனது தந்தை சிவகுமார் ரயில்வே துறையில் உயரதிகாரியாக உள்ளதாகவும், இவர் மூலம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறிவந்துள்ளார். இதனை நம்பிய ரேணுகாதேவி 2020ஆம் ஆண்டு ரூ.12 லட்சம் பணத்தையும், 10 சவரன் தங்க நகைகளையும் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அனுசுயா போலியான பணி ஆணை ஒன்றை ரேணுகா தேவியிடம் கொடுத்து உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து ரேணுகாதேவி விசாரித்த போது போலியான பணி ஆணை என்பதை கண்டுபிடித்தார். அனுசியா, செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுக்காமல் இருந்துள்ளார்.
அவரது முகவரியில் சென்று பார்த்தபோது அவர் குடும்பத்துடன் வீட்டை காலி செய்து விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனுசியா மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுத்து தான் இழந்த நகையையும், பணத்தையும் மீட்டு தரும்படி ரேணுகாதேவி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அரசு வேலை ஆசை - ரூ.2 லட்சம் மோசடி செய்த உதயநிதி நற்பணி மன்றத் தலைவர்