முரசொலி நாளிதழின் அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து பிற்பகலில் சென்னையில் உள்ள தேசிய பட்டியலினத்தவர் ஆணையகத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், முரசொலி அலுவலகத்தின் பட்டாவை வெளியிட்டார். மேலும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதை நிரூபித்தால் அரசியலிலிருந்து விவகுவதாகவும் சவால் விடுத்தார்.
இது தொடர்பாக பாஜகவின் மாநிலச் செயலாளர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார். இது குறித்த ஏழு நாள்களில் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவிட்டது. இதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதிக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் மூன்று மணியளவில் நுங்கம்பாக்கத்திலுள்ள தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. அதில் திமுக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையிலும் ஆர்.எஸ்.பாரதி விளக்கமளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என புகார் அளித்த பாஜக பிரமுகர் சீனிவாசன், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் கால அவகாசம் கேட்டுள்ளனர். புகாரளித்த பாஜகவின் சீனிவாசனால் எந்த ஆதாரங்களையும் கொடுக்க முடியவில்லை. இந்த விசாரணையில் வாய்தா வாங்கியதன் மூலம் புகார் அளித்தவர்களின் நிலையை தெரிந்துகொள்ளலாம். முரசொலி அலுவலகம் இருக்கும் நிலம் தொடர்பான ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம்.
ஒரு இடம் பஞ்சமி நிலமா? இல்லையா என்பதை அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம். இந்த புகார் அளித்தவர்கள் மீது நிச்சயம் மான நஷ்ட ஈடு வழக்கு போடப்படும். இதேபோல் தான் 2ஜி விவகாரத்தை வைத்து அரசியல் செய்தனர். ஆனால் அது தற்போது புஸ்வொனமாய் போய்விட்டது’ என்றார்.
இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - தொடரும் குழப்பங்கள்