உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கைதான கௌசல்யாவின் அப்பா உள்பட மூன்று பேரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும் ஐந்து பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர்.
இச்சூழலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு காலத்தில் சிசுக் கொலைகளை நியாயப்படுத்திய கும்பல் இனிமேல் ஆணவக் கொலைகளை நியாயப்படுத்திப் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கண்ணெதிரே நடந்த சங்கர் கொலை நடந்தது.
ஆனால் தற்போது கொலைக் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சங்கர் கொலை செய்யப்பட்ட சமயத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே அதைக் கண்டித்துக் குரல் கொடுத்தது. இதுபோன்ற குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை பிறக்கும்?