சென்னை விமான நிலையம் அடுத்த பல்லாவரத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று பல்லாவரம் வார சந்தை நடைபெறும். மிகவும் பிரபலமான இந்த சந்தைக்கு ஏராளமான மக்கள் பொருள்கள் வாங்க வருகின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் திருட்டு கும்பல் அங்கிருக்கும் இருசக்கர வாகனங்கள், செல்ஃபோன் உள்ளிட்டவற்றை திருடி வருகின்றனர்.
இதனால், அங்கு பாதுகாப்புப் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இன்று (ஏப்.22) சந்தையின் பாதுகாப்புப் பணியில் குறைந்தளவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர்.
சந்தைக்கு இன்று காலை செடிகள் மற்றும் கலைப் பொருள்கள் வாங்குவதற்காக பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வந்துள்ளார். சந்தையில் பொருள்களை வாங்கிக்கொண்டு இருந்தபோது அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோனை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். அதுமட்டுமின்றி சந்தைக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி உள்பட ஏழு பேரிடம் இருந்து செல்ஃபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.