சென்னை: நங்கநல்லுாரில் சுவரில் விளம்பரம் செய்வதில் திமுக பாஜகவினரிடையே உண்டான தகராறில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆலந்துார் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லுார் ஏ.ஜி.எஸ். தெருவில் உள்ள ஒரு சுவரில், திமுகவினர் தங்கள் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகளின் பெயர்களை விளம்பரம் செய்திருந்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை பாஜக மகளிர் அணி சர்பாக, திமுகவினர் விளம்பரம் செய்திருந்த சுவரில், தங்களின் விளம்பரம் செய்வதற்காக சுவரில் இருந்த திமுக நிர்வாகிகள் பெயரை சுண்ணாம்பு கொண்டு அழித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த திமுகவினர் அந்த இடத்திற்கு வந்து பாஜகவினரிடம் தங்கள் விளம்பரத்தை ஏன் அழிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 100க்கும் அதிகமான காவல் துறையினர் இருதரப்பிற்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, தென்சென்னை பாஜக மகளிர் அணியினர், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். திமுக - பாஜகவினருக்கிடைேய ஏற்பட்ட தள்ளுமுள்ளால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க :'விவசாயிகளின் முதுகில் குத்தியது திமுகதான்!'