சென்னைபாரிமுனையில் உள்ள பல் மருத்துவக்கல்லூரியில், மருத்துவமனை தினத்தை முன்னிட்டு பல்மருத்துவக் கண்காட்சி மற்றும் ரத்த தான முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பள்ளி மாணவர்களுக்கு பற்களைப் பராமரிப்பதற்கான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பல் மருத்துவக்கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல் மருத்துவக்கல்லூரியில் தலா 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு 3ஆவது பல் மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டையில் அமையவுள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் 50 மாணவர்கள் சேரும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெற, டெல்லியில் உள்ள பல் மருத்துவ கவுன்சிலிற்கு அடுத்த மாதம் சுகாதாரத்துறை செயலாளருடன் டெல்லி செல்லவுள்ளோம். மேலும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி வழங்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவுள்ளோம்.
சென்னையில் மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடமாடும் பல் பரிசோதனை வாகனம் மூலம் பள்ளிகளுக்குச்சென்று பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இதேபோன்று நடமாடும் பல் பரிசோதனை வாகனத்தில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.