சென்னை:புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் ஐந்து நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 5ஆம் தேதி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 விழுக்காடும், பழங்குடியினருக்கு 0.5 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு அரசாணை பிறப்பித்தது. புதுச்சேரி அரசு பிறப்பித்த இந்த அரசாணைகளை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (நவ.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.