தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் இரண்டாம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள பள்ளிகளைச் சுத்தம் செய்துவைக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்குப் பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு தொடங்கும் நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள துறை அலுவலர், எழுத்தர், அலுவலக உதவியாளருடன் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
தேர்வு மையத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அனைத்து அறைக் கண்காணிப்பாளர்களும் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தேர்வறைகள் எவ்விதப் பாதிப்புமின்றி தேர்வெழுதக்கூடிய தேர்வர்களுக்கு எவ்வித பாதிப்பையும், ஆபத்தையும் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் உள்ளதா? என்பதையும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தவறாமல் உறுதி செய்துகொள்ள வேண்டும்.