சென்னை:சிறைச் சாலைகளுக்கு கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதற்காக தனது பாராட்டை தெரிவித்து கொள்ளவதாகவும் முன்னாள் மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக தங்களது அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையால் சிறைவாசிகளுக்கு, குறிப்பாக பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் (Heavy duty Laundry machine) வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்காவில் 1913 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சத்தியா கிரகத்தின் போது பெரும் பேரணியில் பங்கேற்றதற்காக தில்லையாடி வள்ளியம்மாள் மற்றும் கஸ்தூரிபாய் மோகன்தாஸ் காந்தி ஆகியோர் மாரிட்ஸ்பர்க் சிறையில் மூன்று மாதங்கள் கடுமையான சிறைத் தண்டனை அனுபவித்தனர்.
“தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்” என்ற புத்தகத்தில் காந்திஜி, அப்பெண்களுக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாக இருந்தது என்றும், சிறையில் அவர்களுக்கு சலவை செய்யும் வேலை வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்விரு பெண்களும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து பழகியவர்கள் என்றாலும், கடுமையான வேலை இருவருக்கும் சோதனையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது ஆரோக்கியத்தையும் பாதித்தது.
1914ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தில்லையாடி வள்ளியம்மாள், காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். கஸ்தூரிபாய் சிறையிலிருந்து விடுதலையான போது உடல் மெலிந்து காணப்பட்டதோடு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1944ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 22 அன்று ஆகாகான் அரண்மனை சிறையில் உயிரிழந்தார்.
சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த சீர்திருத்த நிகழ்வை அதே பிப்ரவரி 22 ஆம் நாளில் பகிர்ந்து கொள்ள விரும்பியதாக தெரிவித்து கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு நமது மாநிலத்தில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் நிலையான நடைமுறையாக இடம்பெறும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொடர்ந்து சிறை சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அந்தத் துறையில், குறிப்பாக பெண் சிறைவாசிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு முன்மாதிரியாக திகழட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறை கைதிகளின் துணிகளை துவைக்க சலவை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை, 5 மகளிர் சிறை, ஒரு பார்ஸ்டல் பள்ளி ஆகிய 15 சிறைகளில் 60 லட்ச ரூபாய் செலவில், 15 கனரக தொழில் கூட சலவை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதை கடந்த வாரம் சென்னை, புழல் சிறையில் சிறை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க:'ஈரோட்டில் தேர்தல் விதிமீறல்கள் அப்பட்டமாக நடைபெறுகிறது' - எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு