சென்னை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி, கார் சிலிண்டர் வெடித்தது. இதில் காருக்குள் இருந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கான முயற்சி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, ஐஎஸ் ஆதரவான வாய்ஸ் ஆஃப் கொரசான் பத்திரிகை சார்பில், அறிக்கை வெளியானது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீனின் தந்தை முகமது யூசுப் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "விசாரணைக்காக முதலில் 9 நாட்களும், பிறகு 8 நாட்களும் எனது மகன் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். விசாரணை என்ற பெயரில் எனது மகனை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். புழல் சிறையில் அவரை சந்திக்க சென்ற போது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.