திருமண ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சென்னை:முகப்பேர் கோல்டன் பிளாட் பகுதியில் வசிப்பவர் டெரி. இவரது மகள் திருமணத்தை முன்னிட்டு நேற்று இரவு தாய்மாமன் சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உறவினர்கள் பேண்ட் வாத்தியம் முழங்க சீர்வரிசை தட்டுடன் சாலையில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் இபு என்கிற இப்ராஹிம் என்ற வாலிபர் தலைமையிலான பேண்ட் குழுவினர் வாத்தியம் முழங்க பாட்டுப் பாடிச் சென்றுள்ளனர்.
அப்போது இசைக்குழுவினர் சரியாக வாசிக்காமல் குளறுபடி செய்ததால் ஆத்திரமடைந்த டெரியின் உறவினர்கள் இசைக்குழுவினரை தகாத வார்த்தையில் திட்டி சரியாக வாசிக்கும் படி சண்டையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இசைக்குழு ஊழியர் ஒருவர் ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். பெட்ரோல் குண்டு வெடிசத்தம் கேட்டு ஊர்வலத்தில் சென்றவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அலறி அடித்து ஒட்டம் பிடித்துள்ளனர்.
இதில் ஊர்வலத்தில் சென்ற சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் இபுவை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவரிடம் இருந்த பட்டா கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்ததையடுத்து, பெண் வீட்டார் சிலர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண் வீட்டாரை சமாதானம் செய்து, பேண்ட் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பேண்ட் குழுவினரை தேடி வருகின்றனர். தற்போது திருமணம் போன்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி நடத்தும் இசைக்குழுவினர் கையில் பெட்ரோல் குண்டு, கத்தி உள்ளிட்டவை வைத்திருப்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜேடர்பாளையத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள்..எஸ்.பி. விடுத்த வார்னிங்.. நாமக்கல்லில் நடப்பது என்ன?