சென்னை:எஸ்.பி. வேலுமணிக்குத் தொடர்புடைய 60 இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 10) லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். குறிப்பாக கோயம்புத்தூரில் அவரது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் எஸ்.பி. வேலுமணி இருந்தபோது அதிரடியாக உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரிடம் விசாரணையும் சோதனையும் நடத்தினர். இதனையடுத்து அதிமுகவினர் கோயம்புத்தூரிலும் குறிப்பாக சென்னை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதி முன்பாகவும் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்.
10 பேர் மீது வழக்குப்பதிவு
அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் கட்சியினரைத் திரட்டி லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தும்போது அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதோடு காவலர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து திருவல்லிக்கேணி காவல் துறையினர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தும்பொழுது அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு உள்ளிட்ட 10 பேர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சட்டவிரோதமாகக் கூடுதல்,
- அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல்,
- நோய்ப் பரவல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் கரோனா பரப்பும்விதமாக மக்களை ஒன்று திரட்டுதல்
ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்ற மேலும் பல அதிமுகவினர் சேர்க்கப்படுவார்கள் எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போராட வாங்க சாப்பிட்டுப் போங்க - வேலுமணி வீட்டில் விருந்து