சென்னை:தமிழ்நாட்டில் இதுவரை தடை செய்த பிளாஸ்டிக் 1768.37 டன் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்; ரூ.1008.24 லட்சம் அபராதத்தொகை வசூலித்திருப்பதாகவும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஈடிவி பாரத்துக்கு கிடைத்த தகவல் படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சுற்றுச்சூழல் துறை இதுவரை தடை செய்யப்பட்ட 1768.37 டன் பிளாஸ்டிக்கை கைப்பற்றியுள்ளது. மேலும் தடை செய்யப்பட பிளாஸ்டிக் உபயோகித்ததன் மூலம் ரூ.1008.24 லட்சம் வசூலித்துள்ளது. மேலும் இந்த பறிமுதல் மற்றும் அபராதமானது ஜனவரி 2019 முதல் மே 2022 மாதம் வரையுடையது என்றனர், அரசு அலுவலர்கள்.
தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் ஏற்கெனவே கோயம்பேடு மார்க்கெட்டில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிரதான இடங்களில் இந்த தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் நிறுவப்படும் என்றார்.
இதுகுறித்து வனத்துறையின் செயலாளர் சுப்ரியா சாஹூ நம்மிடம் கூறுகையில், "சுற்றுச்சூழல் துறை தொடர்ந்து தடை செய்த பிளாஸ்டிக்கை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உபயோகித்து வருகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் முந்தைய ஆண்டுகளைவிட தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்கி விட்டது", எனக் கூறிய அவர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தார்.