சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக துணை வேந்தராக பேராசிரியர் ஆறுமுகத்தை, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 3 ஆண்டுகள் பணிபுரிவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஆறுமுகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் உயர் அழுத்த ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். இவர், 25 ஆண்டுகளுக்கும் மேல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தைக் கொண்டுள்ளார். 14 ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியராக பணியாற்றியதுடன், 15 வருட நிர்வாக அனுபவம் பெற்றிருக்கிறார்.
இவர் 3 புத்தகங்களை எழுதியுள்ளதோடு, 19 சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். தேசிய அளவில் 220 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.