சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் புனரமைப்பு பணி மற்றும் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைக்கும் பணியை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். பின்னர் கிண்டியில் நடைபெற்று வரும் அயோத்திதாசர் மணிமண்டபம் பணிகளையும் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "2021- 22 ஆம் நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அயோத்தி தாசருக்கு மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 2.48 கோடி மதிப்பீட்டில் கிண்டியில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.
இதை போல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் நூலகம் அமைப்பது மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. அம்பேத்கர் மணி மண்டப வளாகத்தில் அம்பேத்கர் திருவுருவ சிலையை வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதுரவாயில் துறைமுகம் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.