சென்னை:தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு தவறும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறக்கூடிய நிலை ஏற்படும் என தனியார் பள்ளிகள் சங்கத்தினர் மாநில கல்விக் கொள்கைக்கான கருத்து கேட்புக் கூட்டத்தில் குழுவின் தலைவரிடம் இந்த கருத்துகளை எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கான மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் அதற்கானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல தரப்பினரிடம் இந்த குழுவினர் கருத்துகளைக் கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகளிடம் இன்று குழுவின் தலைவர் முருகேசன் கருத்துகளைக் கேட்டு அறிந்தார்.
தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் உட்படப் பல்வேறு அமைப்புகள் எழுத்துப்பூர்வமான தங்களின் கடிதங்களையும் குழுவின் தலைவர் முருகேசனிடம் வழங்கினர்.
இதன்பிறகு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி இளங்கோவன், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.