சென்னை:மிலாடி நபி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என 4 நாள்கள் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடையும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னையில் வேலை செய்யும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இன்றுடன் (அக்.2) விடுமுறை முடிவதால், பலரும் சென்னை திரும்ப உள்ளனர். இதனால், பிற மாவட்டங்களிலிருந்து, சென்னைக்கும் வரும் தனியார் பேருந்துகள் கட்டணம் 50 சதவிதம் முதல் 80 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று (அக்.2) மீண்டும் சென்னைக்குத் திரும்ப உள்ளனர். ஏராளமான மக்கள் வெளியூர்களுக்குச் சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்குத் திரும்புவதற்குத் தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும், பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன்படி, கன்னியாகுமரி-சென்னை பேருந்து ரூ.4000 வரையும், தேனி-சென்னை ரூ.3000, நெல்லை-சென்னை ரூ.3000, மதுரை-சென்னை 2700 முதல் 3000 வரையும், கோவை-சென்னை 2000 முதல் 3500 வரை என வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 80சதவீதம் அதிகமாக உள்ளது என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.