சென்னை:கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வாராகி, இவர் தனியார் மாத இதழ் பத்திரிக்கை நடத்தி வருகிறார். மேலும் ஒரு மக்கள் மன்றத்தையும் நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதனுடன் ஒரு வீடியோவையும் சேர்த்து, காவல்துறையினர் மாமூல் வாங்குகிறார்கள். உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறையின் லட்சணம் இதுதானா என, அவரது சமூக வலைதள பக்கங்களில் இரு தினங்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த வீடியோவில் காவல்துறைக்கு ஒவ்வொறு மாதமும் பணம் கொடுத்ததாக பேசிய நபர் விக்ரம் (எ) பாஸ்கர், பள்ளிகரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் தானும் எனது நண்பரான கார்த்திக்கும் கிழக்கு தாம்பரத்தில் ஓயோ நடத்தி வருகிறோம்.
கார்த்திக் சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியாக ஸ்பா நடந்தி வருகிறார். அங்கு வந்த வாராகி என்பவர் தன்னை பத்திரிக்கையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு, அனுமதியில்லாமல் ஸ்பா நடத்தி வருவதாக கார்த்திக்கை மிரட்டி ஒவ்வொரு மாதமும் மாமூல் தர வேண்டும் என பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் விக்ரமை, கார்த்திக் உடன் சேர்ந்து ஸ்பா நடத்துமாறு வாராகி மிரட்டியுள்ளார். அதற்கு விக்ரம் மறுத்துள்ளார். அதற்கு வாராகி என்னை கவனித்து கொண்டால் அனைத்து பிரச்சினைகளையும் பார்த்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அப்படியே காவல்துறையில் சிக்கிக் கொண்டாலும் நான் சொல்வதை போல் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக சொல்லிவிடு என கூறியுள்ளார்.