கரோனா பரவல் காரணமாக, உலகளவில் அனைத்து செய்தித்தாள்களும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், இந்திய செய்தித்தாள் நிறுவனங்களுக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொழிலில், நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 30 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
செய்தித்தாள் நிறுவனங்களின் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, செய்தித்தாள்களின் அகில இந்திய அமைப்பான, ஐ.என்.எஸ் எனும் 'இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி' சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பாக, பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க, தமிழ்நாட்டின் முக்கிய செய்தித்தாள் நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்து, அந்தந்தக் கட்சி, எம்பி.,க்களின் கையெழுத்தை, கோரிக்கை மனுவில் பெற்றுத்தர வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தித்தாள் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, பிரதமரிடமும் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், இதுதொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தனர்.
இதையும் பார்க்க: மதுக்கடைகள் திறப்பு ரத்து- முதலமைச்சர் நாராயணசாமி