சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் பல கனவுகளுடன் இருந்து வருகின்றனர். இதனிடையே, உலகமெங்கும் வந்து பேரிடரை ஏற்படுத்திய கரோனா காலத்தில் இந்த இளம் தலைமுறையினரின் கனவுகளை அடைவதில் இந்த கரோனா காலக்கட்டம் பல சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், சதுரங்கம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, கபடி, துப்பாக்கிச் சூடுதல் உள்ளிட்டவைகள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இந்த தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறும் மாணவர்களுக்குப் பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக 505 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதனைத்தொடர்ந்து, இந்தப் போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதிபெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.
அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மாணவர்கள், அப்போட்டிகளில் பெறும் பதக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் படிக்க இடம் கிடைக்கும். அதாவது, தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் என இந்த விளையாட்டுப் பிரிவில் சாதிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பும். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மை உடற்கல்வி இயக்குனர் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து அதற்கானப் பட்டியலை அனுப்பி வைப்பார்.
விளையாட்டுப் பிரிவில் 247 மாணவர்கள் வாய்ப்புகள் பறிபோயின:இந்த வகையில், இந்த ஆண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கடிதம் கடந்த மே 11ஆம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தப்போது, பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை என்றும் தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், இதற்கான கடிதத்தையும் கடந்த மே 11ஆம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் (National level school sports competition) பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு அதற்கான நிதி, முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.