சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு, ஆகஸ்ட் 7 முதல் 12ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது.
இதனையடுத்து செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், மூவாயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் டிரங்க் பெட்டியில் வைத்து தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.
வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்து, வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின் அமைச்சர் செந்தில் காவல்துறை பாதுகாப்பில் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.