இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தின் கீழ், தாமாகவே பதிவு செய்து கொள்ளும் முறையால்தான், முறைகேடு நடைபெற்று விட்டது” எனக் கூறி- விவசாயிகளுக்குப் போக வேண்டிய 110 கோடியை 'போலி நபர்கள்' கொள்ளையடிக்கத் துணை போன தனது ஆட்சியின் முறைகேட்டைத் திசை திருப்பி - மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாமாகவே பதிவு செய்து கொண்டவர்கள் ஒருவரோ - இருவரோ அல்ல; நூறு பேரோ - இருநூறு பேரோ அல்ல; ஆறு லட்சம் போலி நபர்கள்!
கரோனா பேரிடர் காலத்தில் - விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இடைமறித்துக் கொள்ளையடித்துள்ளார்கள். இதில் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நபர்கள் பணம் பெற்றுள்ளார்கள்!
முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநில அரசின் வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி "இது 110 கோடி ரூபாய் ஊழல்" என்றும், “மார்ச் மாதத்தில் 39 லட்சமாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, திடீரென்று ஆகஸ்ட் மாதத்தில் 45 லட்சமாக உயர்ந்து விட்டது” என்றும் கூறினார்.
தாமாகவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்புதான் இந்த முறைகேட்டிற்குக் காரணம்” என்று கூறியது மட்டுமின்றி துறைச் செயலாளர் சொன்னதை விட, 1 லட்சம் 'போலி நபர்களை' முதலமைச்சர் பழனிசாமி மறைப்பது ஏன்?
இத்திட்டத்தின் கீழ், “பயனாளிகளை அடையாளம் காணுவது, அவர்களின் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை உறுதி செய்வது, அவற்றை பி.எம். கிசான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, அனைத்தும் முழுக்க முழுக்க அதிமுக அரசின் வேலை. பதிவேற்றம் செய்யப்பட்ட பயனாளிகளில் 5 சதவீதம் பேரை நேரடியாக - அவர்களின் கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி - அவர்கள் உண்மையான பயனாளிகளா எனக் கண்டுபிடிப்பதும் அரசின் கடமை”