சென்னை:இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (அக்.26) மாலை, பெங்களூரில் இருந்து இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் சென்னை விமான நிலைய பழைய முனையம் வர இருக்கிறார். அப்போது விமான நிலையத்தில் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ளார். பின்னர் அடுத்த நாள் (அக்.27) காலை 9 மணியளவில், ஆளுநர் மாளிகையில் சில முக்கிய பிரமுகர்களை குடியரசுத் தலைவர் சந்திக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு நடைபெறும் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். காலை 10:15 முதல் 11:15 வரை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து, 11:55 மணி அளவில் விமான நிலையம் திரும்புகிறார்.
அங்கு தமிழ்நாடு அரசு சார்பில், குடியரசு தலைவருக்கு வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது இரண்டு நாள் தமிழக சுற்றுப்பயணித்தை முடித்துவிட்டு, பகல் 12:05 மணி அளவில் இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக குடியரசு தலைவர் சென்னை வருவதை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.