சென்னை: கோயம்பேட்டில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து பெற்ற தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் 100 ரூபாய் பரிசுத் தொகை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,"அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன். ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக டெல்லியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக சார்பில் கலந்து கொள்வார்கள், யார் கலந்து கொள்வார்கள் என்பதை தலைமைக் கழகம் பின்னர் அறிவிக்கும். கலந்து கொண்டால் தான் நிறை குறைகளை தெளிவாக அறிய முடியும். உண்மையில் அது பயனளிப்பதாக இருந்தால் அதனை தேமுதிக ஆதரிக்கும்.
தேமுதிகவின் உட்கட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும். அதற்கான அறிவிப்பை விரைவில் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிடுவார். தலைவர் அவர்களால் செயற்குழு, பொதுக்குழு அறிவிக்கப்படும். செயற்குழு, பொதுக்குழுவிற்கு பிறகு அனைத்து விதமான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவிப்போம். நிச்சயமாக நல்ல தகவலை தலைவர் அறிவிப்பார்.
பொங்கல் பரிசை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக அளித்த பொங்கல் பரிசு போதாது எனக் கூறினார்கள். தற்போது அவர்கள் ஆட்சியில் வெறும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாகவும் அரிசி, சர்க்கரை மட்டும் கொடுக்கிறார்கள். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.