சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கனமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில். இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் 42 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் நிலைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.