பிரக்ஞானந்தா செய்தியாளர் சந்திப்பு சென்னை:அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) காலை சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, பொதுமக்களும் திரளாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து நேரடியாக சென்னை பெரியமேட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்திற்கு வந்த பிரக்ஞானந்தாவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரக்ஞானந்தா, "சென்னை விமான நிலையத்தில் எனக்கு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. செஸ் விளையாட்டு வளர்கிறது என்பது மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பு மூலமாக தெரிகிறது. கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி.
கேண்டிடேட்ஸ் போட்டியில் சவால்கள் அதிகமாக இருக்கும். அதற்கான பயிற்சிகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இந்த போட்டி கடினமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதில் பங்கேற்று வெற்றி பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சிதான். அடுத்தடுத்து நிறைய போட்டிகள் வரவுள்ளது. அதற்குத் தயாராக வேண்டும்.
அதற்கு முன்பு கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். மேக்னஸ் கார்ல்சன் உடன் செஸ் குறித்து கலந்துரையாடினேன். சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு, அடுத்தடுத்த போட்டியில் பங்கேற்க இருப்பதால் அதற்கான பயிற்சியை எடுக்க உள்ளேன். உலகக்கோப்பை செஸ் தொடரில் தங்கம் வெல்லாததை நினைத்து அவ்வப்போது வருத்தமாக இருக்கும்.
ஆனால், வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சிதான். முதலில் கேன்டிடேட் தேர்வுதான் முக்கியம். புதிதாக செஸ் விளையாட்டிற்கு அடுத்தடுத்து வீரர்கள் வருகிறார்கள் என்பதை கேட்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் தமிழ்நாட்டில் இருந்து ஜூனியர் செஸ் விளையாட்டு வீரர்கள் வருகிறார்கள் என்பதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது" எனக் கூறினார்.
இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரக்ஞானந்தா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, 30 லட்சத்திற்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் ஸ்டாலின், பிரக்ஞானந்தாவுக்கு வழங்கினார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக உயரிய ஊக்கத் தொகையான ரூ.30 லட்சத்திற்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நாளன்று, பிரக்ஞானந்தாவை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரக்ஞானந்தா: மேள, தாளத்துடன் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!