சென்னை: அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டியின் (FIDE world cup 2023) இறுதிப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுகளில் மோதிய இந்தியாவின் பிரக்ஞானந்தா, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆட்டத்தை டிரா செய்தனர்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) இறுதிப் போட்டியின் டைபிரேக்கர் முதல் சுற்றின் முடிவில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் கறுப்பு நிறக் காய்கள் உடன் வெற்றி பெற்றார். இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா கடுமையான முயற்சியை மேற்கொண்டு இருந்தார். இதனையடுத்து டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்று தொடங்கியது.
இதில் கறுப்பு நிறக் காய்கள் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா கடும் முயற்சியுடன் இறுதி வரை போராடி விளையாடினார். இருப்பினும், இறுதியாக டைபிரேக்கர் சுற்றின் இரண்டாவது சுற்று 0.5 - 0.5 என்ற கணக்கில் முடிவு பெற்றது. இதனையடுத்து, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 6வது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பெற்று சாதனை படைத்து உள்ளார். இறுதி வரை போராடிய இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி 2023-இன் ரன்னர்-அப் டைட்டிலை வென்றார். இவருக்கு பிரதமர் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ]
இந்த நிலையில், இது குறித்து பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறுகையில், “இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் உடன் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை. ஆனால், அவர் உலகின் நம்பர் 1 வீரர் உடன் விளையாடினார் என்பதே முக்கியம். அடுத்ததாக, அவர் மற்றொரு போட்டியில் விளையாடுவதற்காக ஜெர்மனிக்கு செல்ல உள்ளார்” என தெரிவித்தார்.
அதே போன்று, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி கூறுகையில், “ஒட்டுமொத்த இந்தியாவும் பிரக்ஞானாந்தாவுக்காக பிரார்த்தனை செய்தது. சில செய்திகளை நான் பார்க்கும்போது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இது அவருடைய வாழ்க்கையின் ஒரு தொடக்கம் என்றே நான் நிச்சயமாக கருதுகிறேன். அவர் கண்டிப்பாக நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்” என கூறினார்.
மேலும், பிரக்ஞானந்தாவின் தாயார் அவர் உடனே அஜர்பைஜானில் இருக்கிறார். பிரக்ஞானந்தா உலகில் எங்கு சென்று விளையாடினாலும், அவரது தாயார் உடன் சென்று உறுதுணையாக இருந்து வருகிறார். இதனை ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் காரி காஸ்போராவும், பிரக்ஞானந்தா அரையிறுதிப் போட்டிக்கு முனேறி இருந்த நிலையில் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா!