சென்னை:அனைத்து விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரின் செயலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், 'காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து பேரழிவு ஏற்படுத்தும் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, 2020ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டா அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர், நன்னிலம், பெரியகுடி கிராமத்தில் மூடப்பட்ட கிணறுகளை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் அமைத்து வருகிறது.
கடந்த வாரம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மூலம் முதலமைச்சருக்கு கடிதம் கொடுத்தோம். மறுநாள் பெரியகுடி கிணறு உடனடியாக மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.