சென்னை:பாஜக அரசின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை நாட்டு மக்களிடம் விளக்கும் விதமாக பாஜக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தனி விமானத்தின் மூலம் இரவு 9.28 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.
இவ்வாறு தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பல்வேறு பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். வேலூருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 200 போலீஸார், துணை ராணுவம் உள்பட ஆயிரத்து 400 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பின் முன்னேற்பாடாக வேலூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
முக்கியமாக, அமித்ஷாவை வரவேற்பதற்கு சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி உள்ளிட்ட 12 நபர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இவர்களில் சிலர் விமான நிலையத்திற்கு வராமல், கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் வரவேற்க நின்று விட்டனர்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து காரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை விமான நிலைய ஆறாம் எண் கேட் வழியாக வெளியில் வந்தார். அங்கு ஜிஎஸ்டி சாலையின் இரு பகுதிகளிலும், பாஜக தொண்டர்கள் கொடிகளுடன் திரண்டு நின்று, வாழ்த்து கோஷமிட்டனர். இதனையடுத்து அமித்ஷா காரில் இருந்து கீழே இறங்கி, சாலையில் சிறிது தூரம் நடந்தபடி தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தார்.