தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசுபாடு! - Latest Lockdown News

ஊரடங்கு சமயத்தில் காற்றின் தன்மை மாசற்று தூய்மையாக இருந்து வந்தது. ஆனால் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் இது காலநிலை மாற்றத்திற்கும் வழிவகுக்க வாய்ப்புள்ளது.

post-covid-19-air-pollution-level-increases
post-covid-19-air-pollution-level-increases

By

Published : Sep 12, 2020, 1:52 PM IST

ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலத்திலும் டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த பேச்சுகள் அதிகமாக எழும். அதிலும் சென்ற ஆண்டு டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெருநகர மாநகராட்சியிலும் காற்று மாசின் அளவு கணக்கிடப்பட்டது. அதில் சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து நான்கு மடங்கு காற்று மாசு அதிகரித்திருந்தது தெரிய வந்தது. இது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, காற்று மாசு சிறிதளவும் குறையாத நிலையில், கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மாசு அளவு கணிசமாகக் குறைந்தது. ஆனால் தற்போது கரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

கரோனா பரவல் அச்சத்தினால் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து அதிக அளவு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்த முன்வந்துள்ளனர். இதனால் காற்று மாசு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கின்றனர் சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள்.

ஊரடங்கு காலத்தில் AQI

கரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டு, பொதுப் போக்குவரத்து, அத்தியாவசியத் தேவைகள் தவிர மக்கள் வெளிவர அனுமதி மறுக்கபட்டதால் நாடு முழுவதும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மேலும் இந்த காலகட்டத்தில், காற்று மாசு அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். பல உயரமான கட்டடங்களின் மாசு குறைந்த புகைப்படங்கள் ஊரடங்கிற்கு முன்பு, பின்பு என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

ஊரடங்கு காலத்தில் AQI

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இது தொடர்பாக ஒரு ஆய்வினை நடத்தியது. அதன்படி, சென்னையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது காற்றின் தன்மை ஊரடங்கிற்கு முன்பாக இருந்ததை விட குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. அதே போல் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் காற்று மாசுபாடு அதிகரிக்கத் தொடங்கியதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஊரடங்கிற்கு முன்பு 45.5 முதல் 96.3 வரை இருந்த காற்றின் தரம் (AQI ) முதல் கட்ட ஊரடங்கின்போது 31.5 முதல் 59.3ஆகப் பதிவாகியுள்ளது. அதே போல் இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது 21.0 முதல் 37.8 என்றும் மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது 22.9 முதல் 49.9 என்றும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கரோனா பரவல் ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதாரத் தேவைகளுக்காக பல தளர்வுகளை மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில், பொதுப் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் காற்று மாசின் அளவு

சென்னைவாசிகள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி பேருந்துகளையும் சாலை நெரிசலையும் புதிதாகப் பார்ப்பது போல் பார்த்து ரசித்துச் சென்றனர். இந்த நிகழ்வு சென்னை சாலைகள் இயல்பு நிலைக்கு செல்வதை உணர்த்துவதாக அமைந்தது. இப்படி பொதுப்போக்குவரத்து, ஆட்டோ, இரு சக்கர வாகனம், நான்கு சக்கரம் வாகனம் என அனைத்தும் இயங்கத் தொடங்கியுள்ளதால் சென்னையில் காற்று மாசுபாடு மீண்டும் பழைய நிலைக்கு செல்லத் தொடங்கியுள்ளது.

இது குறித்து பேசிய சுற்றுச்சூழல் ஆய்வாளர் சிரில் அலெக்சாண்டர், ''கரோனா ஊரடங்கு காலத்தை, இயற்கை தன்னை மறு சுழற்சி செய்யும் காலமாகதான் பார்க்க வேண்டும். ஆனால் இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஊரடங்கு முடிவடைந்து பொதுப் போக்குவரத்து பெரிய அளவில் தொடங்கவில்லை என்பதால், மக்கள் அதிக அளவில் தனி வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். உடனடியாக இதனை மேம்படுத்தி பொதுப் போக்குவரத்து தொடங்க வேண்டும்.

தற்போது இந்த கரோனா சூழலில் சென்னையில் அதிக அளவிலான மக்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரே தீர்வு சரியான முறையில் பொதுப் போக்குவரத்தை கொண்டுவர வேண்டும் என்பதே.

சுற்றுச்சூழல் ஆய்வாளர் சிரில் அலெக்சாண்டர்

ஊரடங்கு சமயத்தில் காற்றின் தன்மை நன்றாக இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் மாசடையும் நிலைக்குச் சென்று வருகிறது. வரும் காலங்களில் இது இன்னும் மோசமாகச் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு வலி வகுக்கும். இதைப் பற்றி சரியான புரிதல் மத்திய - மாநில அரசுகளுக்கு இல்லை. சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுக்க அரசு முன்வர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இந்திய அணிக்காக ஆட வேண்டும்... ஆனால், பயிற்சி செய்ய மைதானம் இல்லை...!

ABOUT THE AUTHOR

...view details