தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதனையடுத்து பேசிய அவர், “வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். தமிழினத்தின் பெருமையைப் பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
திரும்பிய பக்கமெல்லாம் திருக்குறளைத் தீட்டியது, பூம்புகார் கோட்டம் அமைத்தது. தமிழை கணினி மொழி ஆக்கியது, தமிழாசிரியர்களை தலைமை ஆசிரியராக்கியது திமுக ஆட்சியில்தான்.
பண்டைய நாகரிகத்தினர் தமிழன்தான்
பண்டைய நாகரிகத்தினர் தமிழன் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதை யாராலும் அசைக்கவோ மறுக்கவோ முடியாது. சிவகங்கை கீழடியில் தற்போது நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
வியக்க வைக்கும் செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட காளைகள், கறுப்பு சிவப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் ஆய்வு
இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். கடல் கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும்.