தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னை பற்றி தவறான தகவல்களை திமுக பரப்புகிறது: பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி ஜெயராமன்

சென்னை: பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் என்னை பற்றி தவறான தகவல்களை திமுக, சமூக வலைதளங்களில் பரப்புகிறது என அதிமுக கட்சியைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன்

By

Published : Mar 11, 2019, 11:56 PM IST

அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்நிலையில் கூட்டம் நிறைவு பெற்றதும் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியைச் சேர்ந்தவரும், திருப்பூர் புறநகர் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,

"குடிநீர் திட்டப் பணிகள் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூறியுள்ளோம். திமுக தூண்டுதல் பெயரில் என் மீது களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

பாதிப்பட்ட பெண் வீட்டார் என்னிடம் முறையிட்ட போது, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நான்தான் காவல்துறையிடம் கூறினேன். அப்படியிருக்க ஸ்டாலின் மருமகன் சபரீசன் என் பெயரை பயன்படுத்தி பொய் புரட்டு வேலையைச் செய்கின்றார். திமுகவுக்கு இது கைவந்த கலை.

குற்றவாளிகள் கைது செய்யப்பட நான்தான் காரணம். சம்மந்தப்பட்ட குடும்பத்தினரும் இது தொடர்பாக பேட்டியளிக்க தயாராக உள்ளனர். தென்றல் செல்வராஜ் மகன் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் உள்ளனர். கோவை ஐ.ஜி அலுவலகத்தில் திமுகவுக்கு எதிராக புகார் கொடுக்க உள்ளேன்.

தளபதி ஸ்டாலின்தான் காப்பாற்ற வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களில் முதல் குற்றவாளி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணை நடந்தாலும், திமுகதான் சிக்கும். யானை யானைதான். பூனை பூனைதான். இந்த விவகாரத்தை காவல்நிலையத்திற்கு முதலில் கொண்டு சென்றதே நான்தான். அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில், சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாகராஜ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் கொள்கை மற்றும் கண்ணியத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அதிமுக தலைமை நிர்வாகம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details