தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணை விவரம் வெளியிட சிபிஐ மறுப்பு! - சிபிஐ தரப்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollachi abuse case, CBI refuses to release investigation

By

Published : Nov 4, 2019, 11:57 AM IST

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய 'உண்மை கண்டறியும் குழு'வை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த சாந்த குமாரி உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக நடத்த இருப்பதால் இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என சிபிஐ தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவித்த அவர், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் வழக்கின் விசாரணைக்கு உதவ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையே அணுக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும்வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருப்பார்கள் எனத் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ புலன் விசாரணை அலுவலர்களிடம் வழங்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டனர். பின், வழக்கின் விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details